அமெரிக்காவால் விதிக்கப்படும் இந்த பரஸ்பர புதிய வர்த்தக வரிகள் யாவை?
ஒரு நாட்டிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறை ஒரு சதவீதமாகக் கணக்கிடப்பட்டு புதிய வர்த்தக வரிகள் விதிக்கப்படுகின்றன. ஏப்ரல் 2ஆம் திகதி 2025 அன்று வெளியிடப்பட்ட அமெரிக்க அரசாங்க அறிவிப்பின்படி, இந்த வரிகள் பல்வேறு நாடுகளின் வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பதற்காக விதிக்கப்படுகின்றன. அதன்படி, ஒரு குறிப்பிட்ட நாடு அமெரிக்காவிற்கு பொருட்கள் ஏற்றுமதி செய்தால், அந்த பொருட்கள் கூடுதல் வரிக்கு உட்படுகின்றன. அதன் விளைவாக, அந்த பொருட்களை வாங்கும் அமெரிக்க நிறுவனங்கள் அந்த கூடுதல் தொகையை அமெரிக்க அரசுக்கு செலுத்த வேண்டியதாகிறது. இது உற்பத்திச்செலவுகளை அதிகரித்து, இறுதிப் பொருட்களின் விலையை உயர்த்தும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அமெரிக்கா தனது உற்பத்தி அலகுகள் அதிக போட்டித்தன்மையுடன் மாற ஊக்குவிப்பதற்காக இந்த வரிகளை விதித்துள்ளது, மற்ற நாடுகளில் உற்பத்திக்கு தடை விதிக்கவில்லை.
இந்த வரி விதிப்பின் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் மற்றும் ஆடைத் துறைக்கு ஏற்படும் தாக்கங்கள் என்ன?
இந்த வரி அமுல்படுத்தப்பட்டால், இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எந்தவொரு பண்டத்திற்கும் வழமையான விலையை விட அதிக விலை அமையக்கூடும். இதனால், நுகர்வோர் தேவையில் குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது. இது இலங்கையின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்திற்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி துறை ஆடைத் துறையாக இருக்கின்ற நிலையில், அமெரிக்கா இந்தத் துறைக்கான மிகப்பெரிய வர்த்தக சந்தையாக இருப்பதால், இந்த வரி ஆடைத் துறையையும் மிகுந்தளவில் பாதிக்கும்.
அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட இந்தக் வர்த்தக வரியால் MAS நிறுவனம் எதிர்கொள்ளும் தாக்கங்கள் யாவை?
நீண்ட காலத்திலான அபாயங்களை குறைப்பதற்காக, எங்கள் குழுக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றுகிறோம். தற்போது இந்த வரி 90 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது மற்றும் எங்களது தற்போதைய உற்பத்தி திறனும் திட்டமிட்ட அளவில் உள்ளது.
இந்த சூழ்நிலையை கையாள இலங்கை, JAAF மற்றும் MAS எடுக்கும் நடவடிக்கைகள் யாவை?
இலங்கை அரசு, அமெரிக்க அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகிறது. JAAFமற்றும் MAS நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுடன் நெருக்கமான கலந்துரையாடல்களை மேற்கொண்டு, நிலைமையை கவனமாக கண்காணித்து வருகின்றன. நீண்ட கால திட்டமாக, நாங்கள் மற்ற நாடுகளில் சந்தைப் பங்குகளை விரிவாக்குவதையும் பரிசீலித்து வருகிறோம்.
இந்த நடவடிக்கைகள் ஆடைத் துறையில் வேலைவாய்ப்புகளின் பாதுகாப்புக்கு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்?
இலங்கையின் பொருளாதாரமும், வேலைவாய்ப்பின் நிலைத்தன்மையும் வலுப்பெறுவதற்காக MAS நிறுவனமும் JAAF உடனும் இணைந்து தொடர்ந்தும் செயற்படுகின்றன. வதந்திகளை அல்லது பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம். உங்களிடம் வரும் எந்தத் தகவலையும் அதிகாரப்பூர்வ ஊடகங்களின் மூலம் சரிபார்த்து உறுதிப்படுத்துங்கள்.
இத்தகைய சூழலில் நாம் பொறுப்புடன் செயல்பட வேண்டியது எப்படி?
இந்த நேரத்தில், ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். உங்களுடைய ஆர்டர்களைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். இந்த நிலைமை உங்கள் மனநலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தினால், யாரையாவது நம்பிக்கையுடன் தொடர்பு கொள்ளுங்கள். நாங்கள் கடந்த காலங்களில் பல சவால்களை எதிர்கொண்டு வெற்றிகரமாக கடந்து வந்துள்ளோம். இந்த நேரத்திலும், ஒரே குழுவாக உற்சாகத்துடன் முன்னேறுவோம்.
இந்த வர்த்தக வரி 90 நாட்களுக்கு இடைநிறுத்தப்படுவதால் எதிர்காலம் எவ்வாறு மாறக்கூடும்?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்குமான வரிகளை மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்த தீர்மானித்துள்ளார். இதனால், இலங்கையின் ஆடைத் துறைக்கு, இந்த மூன்று மாத காலத்தில் வரிகளை மீண்டும் விதிக்கப்படுமா என்பதை முன்னறிந்து, தேவையான அபாய நிவாரண நடவடிக்கைகள் எடுக்க தயார் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அமெரிக்க ஆடை சந்தையில் நமது பங்கினைப் பாதுகாக்கும் வகையில், தொழிற்துறையின் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, தொழிற்துறை பங்காளிகளுடன் இணைந்து இலங்கை அரசு தொடர்ந்து செயற்படுகின்றது.