நிமலுக்கு 40 வயதாகிறது. அவர் வர்த்தகர். நிமலின் மனைவி இல்லத்தரசி. இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் இருந்தனர். கொஞ்ச நாட்களாக நிமலின் செயலில் வித்தியாசம் தெரிந்தது. அவருக்கு தமது மனைவி மேல் பெரும் சந்தேகம். மனைவி வேறொருவருடன் உறவு வைத்திருக்கிறாரா என்று நிமல் சந்தேகப்பட்டார்.
மனைவி அழகாக உடுத்துவதை நிமல் விரும்பவில்லை. அவர் செல்லுமிடங்களை சூட்சுமமாக கண்காணித்தார். மனைவியின் திறன்பேசி, பணப்பை, சட்டைப்பை போன்ற சகலதையும் சோதித்துப் பார்த்தார். உடுத்திய ஆடைகளையும் கவனித்தார். ஒழுக்கம் உள்ள பெண்ணாக இருந்த நிமலின் மனைவி, இத்தகைய செயல்களால் மிகவும் மனமுடைந்து போனார்.
நிமலின் தீவிர சந்தேகம் காரணமாக வீட்டில் அடிக்கடி சண்டை நடந்தது.
ஏறத்தாழ எல்லோர் மனதிலும் கூடுதலாகவோ, குறைவாகவே சந்தேகம் இருப்பது வழக்கம். ஆனால், அந்த சந்தேகம் எல்லை தாண்டியதாக காணப்படுமாயின், அது சந்தேகப்படும் நபர்க்கும், சுற்றத்தார்க்கும் உறவுக்;குள் தீவிர சந்தேகம் எழுமாயின், அது வாழ்க்கையை நல்ல மாதிரியாக கொண்டு செல்ல முடியாத அளவு முட்டுக்கட்டை ஏற்படுத்தலாம்.
மேற்குறிப்பிட்ட உதாரணத்தில் உள்ள சந்தேகமானது Morbid Jealousy என்ற உளவியல் நோய் நிலைமையாகும்.
இதன் பிரதான அறிகுறியாக அமைவது, ஒரு ஆண் அல்லது பெண் தமது துணையை அளவிற்கு மீறி சந்தேகப்படுவதாகும்.
- அதீத பொறாமையும், சந்தேகமும் மனநோயாக மாறலாம்.
- இந்தப் பொறாமை வழமைக்கு மாறான பாலியல் பொறாமையாக வர்ணிக்கப்படுகிறது.
இத்தகைய சந்தேகத்துடன் பின்னிப் பிணைந்த உணர்வானது ஒரு நபரின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது?
- முதன்மையான பிரச்சனையாக அமைவது, இது உறவுகளில் ஏற்படுத்தும் பாதிப்பாகும். உதாரணமாக, கணவன் – மனைவி நல்லுறவு சீர்குலைவது.
- இத்தகைய நபருடன் நெருக்கமான உறவைப் பேணுவது மிகவும் மன அழுத்தம் தருவதாகும். சுருக்கமாகச் சொன்னால், அது மனவாதையாகும்.
- சந்தேகத்தால் திருமண உறவில் பல்வேறு பிரச்சனைகள் எழும் சந்தர்ப்பங்களை உளவள ஆலோசனை சேவையில் நாம் கண்டிருக்கிறோம்.
- ஒருவர் மீது தொடர்ந்து சந்தேகப்படுவோமாயின், அவர் தொடர்பில் நாம் எடுக்கும் தீர்மானங்கள் யதார்த்தத்திற்கு புறம்பானதானதாகவே இருக்கும்.
- சில சந்தர்ப்பங்களில் எந்தவொரு விடயமும் உண்மையா பொய்யா என்பதை ஆராய்ந்து பார்க்கவும் தவறி விடுவோம். அவர் தவறானவர் என்ற நிலைப்பாட்டை எடுத்து விடுவோம். அந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே நாம் தீர்மானங்களை எடுக்க நிர்ப்பந்திக்கப்படுவோம்.
இத்தகையதொரு சந்தேகம் உண்டாயின், அதனை நிவர்த்தி செய்ய சிறந்த சிகிச்சைகள் உள்ளன. உளவள ஆலோசனையும், மனோதத்துவ சிகிச்சையும் அவற்றில் முதன்மையானவை.